ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் – தமீம் இக்பால்

ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வரிசையாக கைப்பற்றிய வங்காள தேசத்தால் எந்த அணியையும் ஒரு போட்டியில் வெற்றிகொள்ள முடியும் என்று அந்த அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் கூறியுள்ளார்.

சிட்டகாங்கில் நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி வங்காளதேசம் தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு தொடக்க வீரர் தமீம் இக்பாலும் முக்கிய காரணமாக விளங்கினார். இவர் 77 பந்தில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

போட்டிக்குப்பின் பேட்டி அளித்த தமீம் இக்பால், தங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ‘‘தென்ஆப்பிரிக்காவை நாங்கள் வென்றிருப்பது, ஒருநாள் போட்டியில் முன்னணியில் இருக்கும் எந்தவொரு அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவை வென்றது வங்காளதேச கிரிக்கெட்டின் அற்புதமான தருணம். எங்கள் பந்து வீச்சாளர்கள் ஆபாரமாக பந்து வீசினார்கள்.

என்னுடன் தொடக்க வீரராக களம் இறங்கிய சவுமியா சர்காரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. தொடக்க வீரரான என்னிடம் இருந்து அணிக்கு நல்ல ஸ்கோர் தேவை. அதை உணர்ந்து நான் கொஞ்சம் நேரம் களத்தில் நின்று சரியான வழியை நோக்கி விளையாடினேன். இந்த வங்காளதேச அணி உலகத்தில் உள்ள எந்தவொரு அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது’’ என்றார்.

சவுமியா சர்கார் 75 பந்தில் 90 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

(riz)