பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி லுலா விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.
ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வழக்கறிஞர்கள் குழு அறிவித்துள்ளது.
இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது.