ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீட்பு குழுவினர் மற்றும் நிருபர்களை குறி வைத்து மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது.
இதில், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் சிலர் உள்பட 20 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.