பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டாக்டர் ஆரிப் ஆல்வி…

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பிடிஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற டாக்டர் ஆரிப் ஆல்வி, 13-வது ஜனாதிபதியாக இன்று(09) பதவியேற்றுக்கொண்டார்.

தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(09) நடந்த பதவியேற்பு விழாவில் ஆரிப் ஆல்வி ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசைன், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா, அனைத்து துறை மந்திரிகள், மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.