இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குறைந்தது 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்தன.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.