ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உத்செயாவிடமிருந்து இனவெறி புகார்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உத்செயா ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய சேர்மன் வில்சன் மனசேவுக்கு ஒரு புகார் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் அலிஸ்டைர் கேம்பல் என்னிடம் இனவெறியுடனும், உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டார். உலக கோப்பை போட்டியில் ஆடும் லெவன் அணியில் என்னை தேர்வு செய்யவிடாமல் செய்தார்.

2010-12-ம் ஆண்டில் கிரிக்கெட் கமிட்டி சேர்மனாக கேம்பெல் இருக்கையில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வெள்ளை இனத்தவர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பில் முக்கியத்துவம் அளித்தார். சுயநலத்துடன் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மார்க்கெட்டிங்கை கவனிக்கும் வகையில் விளையாட்டு நிறுவனம் தொடங்கினார்.

அத்துடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையை சீர்குலைத்தார். எனக்கு நடந்த இனவெறி கொடுமை ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினை குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ளும் என்று தெரியவருகின்றது.

(riz)