பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸுக்கு சென்றுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு தொலைபேசியூடாக இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்குதல் போன்றவற்றை விரைந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.