கொழும்பு – காலிமுகத்திடலில் மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம்..

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி, காலிமுகத்திடலில் மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட உள்ளது.

19 மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், 2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், இம்மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தும், இம்முறை அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும், பேஸ்புக் வழியாக, மலையக இளைஞர், யுவதிகளால் இந்த “ஒக்டோபர் 24” போராட்டத்தை திட்டமிட்டிருந்த நிலையில், மலையக இளைஞர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இப்போராட்டம், அரசியல் சாயமற்று, கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.