வெடிகுண்டுக்கு நாளுக்குநாள் இரையாகும் நம் இரத்தங்கள்

வெடிகுண்டுக்கு நாளுக்குநாள் இரையாகும் நம் இரத்தங்கள்

நைஜீரியா மற்றும் கெமரூனில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று இரவு அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளது. இத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும், பலர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கெமரூனின் மரூவா நகரில் அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 11 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் ஜனாதிபதியாக முகம்மது புகாரி பொறுப்பேற்ற பின்னர் இவர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய தாக்குதல்கள் அனைத்திற்கும் போகோ ஹராம் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று இருந்தனர். எனவே, இந்த தாக்குதல்களையும் அவர்கள்தான் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

போகோ ஹராம் அமைப்பு சார்பில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்றும், எதிர்பார்க்காத சமயத்தில் முன்பைவிட வலிமையுடன் வருவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)