பெரும்பான்மையினை நிரூபிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை.. (முழுமையான அறிக்கை)

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரேரணையின் 1ம் வசனத்தை நீக்கி, மீண்டும் இன்று(16) பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்புக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சபாநாயகரும், ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பவற்றின் பிரதிநிதிகளும் நேற்று(15) ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

இதன்போது நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தங்கள் வசம் இருப்பதாக இதன்போது தெரிவித்த கட்சித் தலைவர்கள், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதற்குரிய கௌரவத்தினை அளிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.

இதன்போது, நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தினை நீக்குதல் மற்றும் மீண்டும் இன்று அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன்,

வாக்கெடுப்பினை பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்கள் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கமைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, அந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறே பாராளுமன்றத்தினுள் அமைதி நிலையை உறுதி செய்து, ஜனநாயகம் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

ஜேவிபியினால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாம் வசனத்தில், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்குரிய 2094ன் கீழ் 43, 2094ன் கீழ்43ஏ மற்றும் 2094ன் கீழ் 44 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் அதன் கட்டளைகள், நியமனங்கள் அரசியல் யாப்புக்கு விரோதமானது என்றும், சட்டத்துக்கு முன்னால் சூனியமானதும் அதிகாரமற்றதும் எனவும், எந்த அதிகாரமோ, அங்கீகாரமோ அற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 2094ன் கீழ் 43 வர்த்தமானியின் மூலம், பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை தமக்குள்ள அதிகாரத்தின் மூலம் பதவி நீக்குமாறு அறிவித்திருந்தார்.

2094ன் கீழ் 43 ஏ வர்த்தமானியின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைய அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்திருந்தார்.

அத்தடன், 2094ன் கீழ் 44 வர்த்தமானி ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.

இந்த வர்த்தமானிகளை சவாலுக்கு உட்படுத்தும் வசனங்களை நீக்குமாறே ஜனாதிபதி கோரியுள்ளார்.

 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு
2018-11-15