‘‘இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிறைய இருப்பதால், இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதிக்கும்,’’ என, முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் வரும் ஆகஸ்ட் 12ல் துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் கூறுகையில்;
தற்போதுள்ள இந்திய அணி, ஆசிய மண்ணில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளது. எனவே இலங்கை மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். தவிர, இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர். இவர்களில் நிறைய பேர் ‘மேட்ச் வின்னராக’ ஜொலிக்கின்றனர். போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தலாம்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்ககாரவுக்கு இது கடைசி தொடர் என்பதால், வெற்றியுடன் விடைகொடுக்க விரும்புவார்கள்.
இந்திய டெஸ்ட் அணிக்கு கெப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோஹ்லி அணியை திறமையாக வழிநடத்துவார். களத்தில் ஆக்ரோஷ்மாக இருக்கும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் அசத்தி வருகிறார். எனவே இவர், கெப்டன் பணியிலும் சாதிப்பார் என நம்புகிறேன்.
ஜிம்பாப்வே தொடரில் அஜின்கியா ரகானே சிறப்பாக செயல்பட்டார். இவர், மூன்று விதமான போட்டிகளிலும் விளையாட தகுதியானர்.
பிரிமியர் சூதாட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன். நீதிபதி லோதா கமிட்டியின் தீர்ப்பால் பிரிமியர் தொடருக்கு எவ்வித ஆபத்தும் வராது. இத்தொடர் மூலம் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தொடர் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை வரும் காலங்களிலும் தொடரும்.
என லட்சுமண் கூறினார்.
(riz)