கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அருகதையற்ற ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ்

மாவட்ட மட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலியினது அரசியலானது சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக அண்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறைமுகமாக ஹிஸ்புல்லாஹ்வினதும் அமீர் அலியினதும் அரசியல் எதிர்காலத்தினை சுட்டிக்காட்டியமையினை குறித்து ஹிஸ்புல்லா கருத்துத் தெரிவிக்கையில்;

“என்னை பொறுத்தமட்டில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைமையானது பிறரை தோற்கடிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். முஸ்லிம்கள் தரப்பில் அதிகமானவர்கள், அனுபவமிக்கவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் 20வது சரத்தினை சமர்பித்த வேலையில் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளிக்காட்டினோம். ஆனால் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்புக்கு வந்து என்னையும் அமைச்சர் அமீர் அலியையும் தோற்கடிப்பதற்காக அரசியல் செய்கின்றமையினை நினைக்கின்ற பொழுது அவர் முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க எந்த அருகதையும் அற்றவர் என்பதனை நிரூபிக்கின்றது.

அத்தோடு இம்முறை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் என்றும் இல்லாதவாறு தோற்கடிக்கப்படுவார் என்பது உறுதியாக அடித்துக் கூறும் விடயமாக உள்ளது. அது அவருக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்படும் தண்டனையாகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதே கணம்; பஷீர் சேகுதாவூத் குறித்து கருத்துப் பகிர்கையில்

பசீர் சேகுதாவூத்தின் கருத்தினை நான் வரவேற்கின்ற அதே சமயத்தில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மாவட்டத்தில் அரசியல் செய்யும் எங்களுக்கிடையில் இதுவரைக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டது கிடையாது.

அந்த வகையில் கட்சியின் தவிசாளரே தலைவரின் கூற்று பிழையானது என பகிரங்கமாக போராளிகள் முன்னிலையில் கூறுகின்றார் என்றால் முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் போக்கு எவ்வாறு காணப்படுக்கின்றது என்பதை அறிந்து கொள்வதில் தடைகள் இருக்காது, அதை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமுமில்லை என்பதே எனது கருத்தாகும்”.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து உங்களுக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதினால் உங்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட வாய்பில்லையா என வினவியிருந்த போது;

“அல்ஹம்துல்லில்லாஹ் எனது வாக்கு வங்கியில் எவ்விதமான சரிவும் ஏற்படப்போவதில்லை. 25 வருடங்களாக என்னை தோற்கடிக்க வேண்டும் என பலரை களத்திலே இறக்கி தோல்வியைக் கண்ட அப்துர் ரஹ்மான் இம்முறை நேரடியாக களத்தில் குதித்துள்ளார். காத்தான்குடி மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.

மிகத்தெளிவான பாடத்தினை சகோதரர் சிப்லிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் புகட்டுவார்கள் என்பது வருக்கினற 18ம் திகதி நாடறிந்த நிதர்சனமாக இருக்கும்.

மேலும் மஹிந்த குறித்து வினவிய போது;

இம்முறை மஹிந்த ராஜபக்ஷவின் அணியுடன் சேர்ந்து நீங்கள் போட்டியிடுவதினால் உங்களை சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?

சென்ற அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் அரசில்வாதிகளும் கூடவே இருந்தனர். கடைசி நிமிடத்திலேதான் அனைவரும் வெளியேறினார்கள். அது அவர்களுடைய சுயநலத்திற்காகவும், சொந்தக் காரணங்களுக்குமாகவே இருந்தன. ஆனால் நான் ஒரு நன்றி கெட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதியாக என்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தேர்தல் வந்தது அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார் அத்தோடு அக்கதை முடிந்து விட்டது. ஆனால் தற்பொழுது மைத்திரிபால சிறிசேனவை மதிக்கின்றோம். அந்தவகையிலே மைத்திரியை எமது தலைவராக ஏற்றுக்கொண்டு நாங்கள் இத்தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். ஆனால் நாங்கள் மஹிந்த அணியல்ல மைத்திரியின் தலைமையின் கீழ் செயற்படும் அரசியல்வாதிகள்” எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது” எனவும் கூறியிருந்தார்.