பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிக்கு பாராளுமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு

கடந்த தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை கேட்டறிவதற்காக குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்ள பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று சபாநாயகர் கருஜயசூரியவினால் நியமிக்கப்பட்டது.

சமல் ராஜபக்ஸ , ரஞ்சித் மத்துமபண்டார , சந்திரசிறி கஜதீர , பிமல் ரத்நாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழு நாளை மறுதினம்(12) முதல் தடவையாக பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உயரதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.