ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் TNA எதிர்கட்சிப் பதவியினை இழக்க நேரிடும்..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமாயின் எதிர்கட்சிப் பதவியில் உரிமை இல்லை என முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.

இன்று(12) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“இந்த பாராளுமன்ற அமர்வுகள் கேளிக்கைக்கு உரித்தானது.. நேற்றைய தினம் முழுவதும் TNA ஆதரவினை பெற ஐக்கிய தேசியக் கட்சியானது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

TNA உடன்பாடுகளுடன் ஆதரவு வழங்கும் என சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் TNA சேர்ந்து ஆட்சி நடத்துமாயின் எமக்கு பிரச்சினைகள் இல்லை..

ஆனால், எமக்குள்ள பிரச்சினை, தற்போது எதிர்கட்சிப் பதவியில் உள்ள TNA ஆதரவு வழங்குவதேயாகும்… பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாயின் எதிர்கட்சிப் பதவியில் இருக்கவும் முடியாது அதுவும் பறிபோகும். இந்த அரசியல் குழப்ப நிலையினை தீர்க்க நீதிமன்றத்திற்கோ அரசியலமைப்பிற்கோ அதிகாரம் இல்லை.. அதனை மக்களாலேயே முடியும்..”