புதிய அமைச்சரவை இன்று(17) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால், புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆகலாம் என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக இருந்தது.
எனினும், நேற்று(16), 21 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், அவர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது தொடர்பாக, முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 30 அமைச்சர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன், தமது கட்சி உடன்பாடு எதையும் செய்து கொள்ளாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.