பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறையினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் சேதங்கள் குறித்த மதிப்பாய்வை கோரியிருந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர்;
“பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து நாம் கலந்துரையாடியிருந்தோம்.
எமது மதிப்பீடுகளின் படி சொத்துக்களுக்கான சேதம் 3,30,000 ரூபாவாகும். எனினும், மதிப்பீட்டுத் திணைக்களம் 1,75,000 ரூபாவாக மதிப்பீடு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் இரண்டு மூன்று வருடங்கள் பழமையானவை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், மாற்றீடு செய்ததற்கான செலவாக அவற்றை எடுத்துக்கொண்டு மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்” என்றார்.