தனது செயலுக்காக வெட்கமடைகிறேன்.. மன்னிப்பும் கோருகிறேன்..

அரசியல் குழப்பங்களின் போது, பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று(08) தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றனர்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்திருந்ததுடன், அதனை நெருங்க விடாமல் தடுத்தனர்.

அப்போது, சபாநாயகரின் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ அமர்ந்திருந்தார். இது குறித்து நேற்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அருந்திக பெர்னான்டோ வருத்தம் தெரிவித்தார்.

“சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், சபாநாயகர் பதவியையும், ஆசனத்தையும் தான் மதிக்கிறேன். தான் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, சபையில் செங்கோல் இருக்கவில்லை..” என்றும் அவர் கூறினார்