டோனியின் ‘ரித்தி ஸ்போர்ட்ஸ்’லிருந்து ரெய்னா திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. சிறந்த அதிரடி வீரரான இவர் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பனியில் (RHITI SPORTS) பணியாற்றி  வருகிறார்.

அதாவது  அவரது விளம்பரங்கள் அனைத்தையும் இக்குறித்த நிறுவனம்தான் கவனித்து வந்தது. ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணி கெப்டன் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் கம்பெனியில் இருந்து ரெய்னா திடீரென விலகியுள்ளார். அவர் தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும், இந்நிறுவனம்தான் இனி ரெய்னாவின் விளம்பரங்களை கவனிக்கும் அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.

ஐ.ஒ.எஸ். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் கிரிக்கெட் வீரர் ரெய்னா என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் விஜேந்தர்சிங், மேரிகோம், சுசில்குமார், சாய்னா நேவால் போன்ற விளையாட்டு பிரபலங்களின் விளம்பரங்களை கவனித்து வருகிறது.

டோனியின் கம்பெனியில் இருந்து ரெய்னா விலகியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்திய அணியில் விளையாடும் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆவார்கள். ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. மேலும் டோனி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே ஆடுவார். இதனால் வியாபார நோக்குடன் ரெய்னா இந்த முறையை எடுத்துள்ளார்.

ரவிந்திர ஜடேஜா, மொகித் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகிய வீரர்களும் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் உள்ளனர். இதில் ஐடேஜா, மொகித் சர்மா ஆகியோர் டோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)