முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் நேற்று(07) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
அதேவேளை, காதி நீதிமன்றங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் ரவூப் ஹகீம், இராஜாங்க அமைச்சர்களான எம் எஸ் எஸ் அமீர் அலி, செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்துஜீவிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

