(FASTGOSSI | COLOMBO) – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையுடனான உறவுகளுக்கு தமது நாடு பெரிதும் முக்கியத்துவம் அளிப்பதாகவும், முக்கியமான அண்டை நாடாகவும் நட்பு நாடாகவும் இலங்கை இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதிநிலையை பேணுவதில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, தெற்காசியாவில் உறுதி நிலையை பேணுவதற்கு எல்லா நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 44 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முறுகல் நிலை உக்கிரமடைந்தது.
இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலர் சந்தித்து, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவது குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த பின்னணியிலேயே, இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு உரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.