(FASTNEWS|AMERICA) போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்காவும் உத்தரவிட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரகத்தை சேர்ந்த விமானம் இந்தோனேசியாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர்.
இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன.
மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சந்தேகங்களும், அச்சமும் விமான நிறுவனங்களிடம் எழுந்தது. எனவே கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளதுடன், பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.