வசீம் தாஜுடீனின் சடலம் விசாரணைக்காக 5ம் திகதி தோண்டப்படும்

பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை(05) மையவாடியிளிருந்து தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு மேலும் அறிவித்தது.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், விபத்தினால் ஏற்பட்டதொன்றல்ல எனவும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த  நிலையிலேயே, மேற்படி மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த மயானம் தெஹிவளை – களுபோவில பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ளது என்று பொலிஸார் கூறினர்.

கடந்த 2012ஆம் ஆண்டில், நாரஹேன்பிட்டி மைதான வீதியில் தீப்பிடித்து எரிந்த காரொன்றுக்குள் இருந்து வசீமின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த மரணம், திடீர் விபத்தின் மூலம் ஏற்பட்டதல்ல என்று பொலிஸார், ஏலவே நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையிலேயே, மயானத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

(riz)