போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்…

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று(16) மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் ரேணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.