தோல்விக்கான காரணம் கோஹ்லி மட்டுமே – கெளதம் சாடல்…

(FASTNEWS| COLOMBO) – இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரும் தலைவருமான விராட் கோஹ்லியை இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் மீளவும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் கெளதம் கம்பீர் தெரிவிக்கையில்;

“..ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்சிபி-யில் தொடர்ந்து தலைவராக இருந்து வரும் விராட் கோஹ்லி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோஹ்லியை ஒப்பிட இயலாது. இன்னும் தலைமை திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை அவரை ஆர்சிபி தலைவராக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தலைமை பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான்…

‘‘துடுப்பாட்டத்தில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தலைமை பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக் கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறகிறேன். தொடர் தொடங்கும் போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோஹ்லி அழைத்தார்.

அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’” என்று கெளதம் கம்பீர் கூறியிருந்தார்.

இதுகுறித்து விராட் கோஹ்லியிடம் பதில் கருத்து தெரிவிக்கையில்; ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்..” என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.