இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று நடைபெறவுள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். சென்னை செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்தில் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பழைய விமான நிலையம் வந்திறங்கும் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், காமராஜர் சாலை வழியாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு மோடி செல்லவுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி முடித்த பின்னர் போயஸ் தோட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் மதுவிலக்கு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
இதையடுத்து, விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிரதமர் மோடி வந்து செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.