(FASTNEWS|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது 27 ஆம் திகதி அதிகாலை 02.00 மணிக்கு வடஅகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஒரு சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக்கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக்கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதி மாலைஅளவில் (இந்தியா) வடதமிழ் நாட்டுக்கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய வங்காள விரிகுடாகடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.