மீண்டும் தனுஷுடன் இணையும் சதீஷ்

சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சதீஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மெரீனா’ படத்தின் மூலம் காமெடி நடிகராக வலம் வரத்தொடங்கினார். பின்னர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து இவர் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம் இவரை முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக ஆக்கியது.

இதைத் தொடர்ந்து விஜய்யுடன் ‘கத்தி’, விஷாலுடன் ‘ஆம்பள’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் ‘விஐபி-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப்-நித்யாமேனன் நடித்து வரும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சதீஷ், மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

ஏற்கெனவே, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களிலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுபோல், இந்த படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.