(FASTNEWS | COLOMBO) – இந்திய பாராளுமன்றத் தேர்தல், 04 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(23) காலை தொடங்கியுள்ளது.
இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11ம் திகதி தொடங்கி கடந்த 19ம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.