இன்றும் நாட்டின் சில பிரதேசங்களில் காற்றுடன் கூடிய மழை

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.