கூகுள் தலைமை அதிகாரியாக தமிழர் சுந்தர்பிச்சை நியமனம்

பிரசித்தி பெற்ற தேடல் இணையதளம் ‘கூகுள்’. இந்த இணையதள நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ‘ஆல்பபெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பபெட்டின் ஒரு அங்கமாக ‘கூகுள்’ இருக்கும். இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைப்பதவிக்கு, அதாவது தலைமை செயல் அதிகாரி பதவிக்கு சென்னை தமிழர் சுந்தர்பிச்சை (வயது 43) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உலகளாவிய கௌரவம் ஆகும்.

ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவராக கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினும், தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜூம் செயல்படுவார்கள். இது தொடர்பாக பேஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிச்சையை போன்ற திறமை வாய்ந்த ஒரு நபரை பெற்றிருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவருடன் சில காலம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். முடிந்த அளவுக்கு உதவி இருக்கிறேன். அதை நான் தொடருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வாழ்த்துகள் சுந்தர் பிச்சை. கூகுளில் உங்கள் புதிய பங்களிப்புக்கு எனது நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
(riz)