(FASTNEWS|COLOMBO) – இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் வாக்குகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்தன.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.