ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி Phnom Penh சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் Samdech Chaufea Veang Kong Som Ol உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

குறித்த இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni அவர்களை சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.