தமிழனத்தினை கொச்சைப்படுத்தும் சவேந்திர சில்வாவின் நியமனம் ஒரு கண்ணோட்டம்
(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது எனலாம்.
யார் இந்த சவேந்திர சில்வா :
1964ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி மாத்தளையில் பிறந்தவர். இவர் இவரது ஆரம்ப கல்வியினை அனுராதபுரம் – சென்.ஜோசப் கல்லூரி மற்றும் மாத்தளை விஜயா கல்லூரியிலும் உயர் கல்வியினை மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும் தொடர்ந்தவர்.
1984ம் ஆண்டு மார்ச் 05ம் திகதி தியத்தலாவையில் உள்ள இலங்கை மிலிட்டரி எக்கடமியில் இலங்கை இராணுவத்திற்காக இணைந்தார்.
இவர் இராணுவத் தரவரிசையில் லெப்டினன் ஜெனரலாகவும் இராணுவப் பிரிவில், இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பதவி முத்திரை குத்தப்பட்டவர்.
இவர் தலைமை அதிகாரியாக, அட்ஜூடண்ட் ஜெனரல்,
மற்றும் இறுதிப் போரில் 58வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவருமாவார்.
நான்காம் ஈழப் போர் மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியவர்.
இவர் வீர விக்கிரம விபூசணம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம் ஆகியவற்றை சுவீகரித்த ஒருவர்.
சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டு :
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 58வது டிவிசனுக்கு தலைமை தாங்கியார் சவேந்திர சில்வா. இவர்மீது ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமைப்புகள் பலவும் போர்க்குற்றங்களை சுமத்தி இருந்தன.
சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு சர்வதேசம் எதிர்ப்பு :
ஐக்கிய நாடுகளது விசாரணைக் குழு –
2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, 58 பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.நாவின் குற்றச்சாட்டில் 2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவர்.
சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணமாகும் எனவும் ஐக்கிய நாடுகளது விசாரணைக் குழுவானது தெரிவித்திருந்தது.
சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் –
சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் தெரிவிக்கையில், 2009 மே 18ம் திகதி வெள்ளைக் கொடியுடன் சரணடைதல் இடம்பெற்றவேளை அப்பகுதியில் சவேந்திர சில்வா காணப்பட்டார் எனவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களுடன் சில்வா கைகுலுக்குவதை நான் நேரில் பார்த்தேன் என ஓருவர் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு ஒவ்வொரு முறை செல்லும்போது கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இராணுவ பிரதானியொருவரை இலங்கை தற்போது கொண்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவமரியாதை செய்யும் நியமனம் இதுவென தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இது இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்
முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான ஒருவரிற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி சிறிசேன என்ன கருதுகின்றார் என்பது புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாக்லெட் –
இலங்கை அரசு சவேந்திர சில்வாவை இராணுவத்தின் உயரிய பொறுப்பிற்கு நியமித்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இலங்கை அரசு, 1.10.2015 அன்று ஐ.நா சபையில் ஒப்புக்கொண்ட தீர்மானம் (30/1), இலங்கையில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவது, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பனவற்றை வலியுறுத்துகிறது.
சவேந்திர சில்வா, கடந்த மார்ச் மாதம் இராணுவத்தின் தலைமைப் பணியாளராக நியமிக்கப்பட்டபோதே பலத்த எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. தற்போது, அதையும் மீறி இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் –
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா :
சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கனடா :
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது
ஜேர்மன் :
சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒருபகுதியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட், ‘உண்மையிலேயே இவ்விடயம் மிகுந்த அவதானத்திற்குரியது’ என்றும் பதிவிட்டிருக்கிறார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் :
இலங்கை இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டிருப்பதானது, இலங்கை விவகாரத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசியத்தினை உடனடியாக வலியுறுத்துகின்றது என தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு உள்நாட்டு எதிர்ப்புகள் :
தமிழ் தேசியக் கூட்டமைப்பு –
சவேந்திர சில்வாவின் நியமனம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், இலங்கை அரசு, அவருடைய நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிரான நடவடிக்கை இது. 2012-ம் ஆண்டு, ஐ.நா-வின் மனித உரிமை அறிக்கை சர்வதேசக் குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையுள்ள நபராக சவேந்திர சில்வாவை குறிப்பிட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில், சில்வா தலைமைதாங்கிய 58 பிரிவு நியாயமற்ற தாக்குதல்களை நடத்தியிருப்பதாக, 2015-ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் நடத்திய விசாரணையில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இத்தகைய குற்றங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு பரீசலிக்கப்படும் என்பதையே சில்வாவின் நியமனம் காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா –
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்க்ளுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவுக்கு நியமனம் வழங்கியமை தொடர்பில் மௌனியாக இருப்பது கேள்விக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டதா எனவும் சந்தேகம் நிலவுகின்றது.
R.Rishma