ஹரின் பெர்னாண்டோவின் கருத்தால் அரசியலில் பரபரப்பு (video)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை அறிவிக்காவிட்டால், அரசியலில் இருந்து அடுத்த 5 வருடங்களுக்கு ஓய்வுப்பெறவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நேற்று முன் தினம் கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக உள்ளது.

அண்ணனிடமிருந்து தம்பிக்கும் தம்பியிடமிருந்து அண்ணனுக்கும் அதிகாரம் செல்லவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு நாட்டில், நாம் இவ்வாறான ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு உள்ளது?

குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டை காப்பற்ற வேண்டும். இதுதான் எமது ஒரே நோக்கமாக இருக்கிறது.

அவர் 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர். அத்தோடு, அவருக்கு வயதும் குறைவாகவே இருக்கிறது. இவ்வாறான நபர்களிடம் அதிக உத்வேகம் காணப்படும். இன்னும் 20 வருடங்களுக்குகூட அவரால் சேவையாற்ற முடியும். இதனால்தான் நாம் அவரை பிரதானமாக கூறிக்கொண்டுவருகிறோம்.

எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும், 5ஆம் திகதி குருநாகலில் எமது மாநாட்டை நிச்சயமாக நடத்துவோம். இதனையடுத்து, கம்பஹாவில் மாநாட்டை நடத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்காவிட்டால் நான் நிச்சயமாக அடுத்த 5 வருடங்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்பதையும் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

நாம் நாட்டுக்காகத்தான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளோம். இதற்காக எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களை சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம்.