(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் துணைத் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே நேற்று(10) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அமைச்சர் சஜித்திற்கு ஆதரவு தரப்பினர் சஜித் இனை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் வரையில் கருத்துக்கள் ஆராயப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்க, ஜனாதிபதி வேட்பாளரானது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் சாத்தியம் இன்னும் 50% மட்டுமே சாதகமாக இருப்பதாகவும், அவ்வாறு இல்லை எனின், இறுதிக் கட்டத்தில் அமைச்சர் சஜித்திற்கு மாறாக பிரிதொரு துரும்பினை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி இரகசியக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், அமைச்சர் சஜித்தின் கனவு நனவாகாதவிடத்து கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகி புதிய சின்னத்தில் போட்டியிடவும் பின்வாங்க மாட்டேன் என சஜித்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன.