இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு அளிக்ககூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், முன்னணி டெஸ்ட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் எந்த அணியும் சர்வதேச போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது.

இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு -20  போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

கராச்சி விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கை அணிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை அணி வீரர்கள் தங்கும் ஓட்டல், செல்லும் வழி, மைதானம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 2-வது போட்டி 29 ஆம் திகதியும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.