(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திடிரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 35 க்கும் அதிகளவான யானைகளால் அப்பிரதேசம் கலவர பூமியானது.
குறித்த யானை கூட்டத்தை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பொதுமக்களின் செயற்பாட்டினால் தோல்வியடைந்துள்ளது.
விரட்டி செல்லப்பட்ட யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மாவடிப்பள்ளி பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர்.
பின்னர், வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வெடிகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.