(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று, 2-0 என நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக தன்னுடைய இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய பானுக ராஜபக்ஷ கன்னி அரைச் சதத்தை பெற்று, அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பங்கினை சிறப்பாக செய்திருந்தனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த போதும், பானுக ராஜபக்ஷ 48 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை விளாசினார். இவருடன் நேர்த்தியான இணைப்பாட்டத்தை வழங்கிய ஷெஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதியில் களமிறங்கிய தசுன் ஷானக 15 பந்துகளில் 27 ஓட்டங்களை விளாசி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 182 ஆக உயர்த்தினார்.