(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கோட்டாபய ராஜபக்ஸவின் முதலாவது பிரசார கூட்டத்தில் அசாதாரணமான முறையில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை தம்பர அமில தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காலி முகத்திடலில் நேற்று நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே தேரர் இந்த விடயத்தை விமர்சித்துள்ளார்.
நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்யவே தேர்தல் நடைபெறுவதாகவும் மாறாக நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தெரிவு செய்ய தேர்தல் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´அன்று மெதமுலனையில் சகோதரனை முன் ஜன்னலில் தொங்கவிட்ட தமக்கு இன்று தம்பியை பின் ஐன்னலில் தொங்கவிடுவது பெரிய காரியம் அல்ல´ எனவும் கூறினார்.
மேலும், அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதியானதும் முதல் வேலையாக அசாதாரணமான முறையில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதாக தெரிவித்த கருத்துக்கு நேற்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த கருத்தானது நீதி மன்றத்தை அவமதிப்பதாக உள்ளது. தப்பி தவறி கோட்டாபய ஜனாதிபதியானால் நீதி மன்றத்தை மூடும் நிலை ஏற்படும் என தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் சமீர பெரேரா ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
Video Courtesy; UTV News
இக்கருத்து தவறான கருத்து எனவும் இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இவ்வாறான பாரதூரமான கருத்தை தெரிவித்தது இல்லை என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.