(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் மாணவர்கள் ஒன்றியங்களின் ஏற்பாட்டில், இது தொடர்பான ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தன.
இதன்படி, ஒற்றையாட்சி நீக்கப்பட்டு, சமஷ்டி அடிப்படையாலான தீர்வு வழங்குதல், போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை, காணாமல் போனவர்களுக்கு சர்வதேச பொறிமுறை ஊடாக நீதி வழங்கல், காணிகள் விடுவிக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகைகள் உள்ளடக்கப்பட்ட ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த ஆவணத்தை முன்வைத்தே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன், டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இதில் நேற்று(14) கைச்சாத்திட்ட நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொண்டிருந்த போதும், குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட மறுத்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.