போட்டிகளில் ஈடுபட மாட்டோம்- சிரேஷ்ட வீரர்கள் திடீர் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப மாட்டோம் என பங்களாதேஷ் அணி தலைவர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பங்களாதேஷ் பிரிமீயர் லீக் மற்றும் டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னணி வீரர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அனைத்து முதல்தர மற்றும் தேசிய போட்டிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிற்கான தேசிய அணியின் பயிற்சிகளும் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த 11அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட் விளையாடமாட்டோம் என ஷாகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உட்பட முன்னணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

‘‘எங்களது போராட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியை சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இங்கே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் கிரிக்கெட்டில் ஈடுபடப்போவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் திரும்பமாட்டோம்’’ என ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஸ் அணி வீரர்களின் இந்த கோரிக்கை காரணமாக இந்தியாவிற்கான அடுத்த மாத சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.