இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று(23) இடம்பெற்றது.
இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருந்தது.
எனவே ரசிகர் பெருமக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சங்கா 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
மேலும் முதலாவது இன்னிங்சிலும் அவர் 32 ஓட்டங்களை மட்டுமே பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 20ம் திகதி 2வது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அபாரமாக ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 306 ஓட்டங்களுடன் சுருண்டது.
இதனையடுத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்தியது.
இந்நிலையிலேயே நேற்று 18 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தில் முரளி விஜயிடம் பிடி கொடுத்து சங்கா ஆட்டமிழந்தார்.
இந்தியாவிற்கு எதிரான நான்கு இன்னிங்சிலும் அஸ்வின் பந்தில் தான் சங்கக்கார ஆட்டமிழந்தார். காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5, 40 ஓட்டங்களும், இந்த டெஸ்டில் 32, 18 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
இதனால் தனது கடைசி டெஸ்டில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சங்கக்கார சர்வதேச போட்டியில் இருந்து விடைப்பெற்றமை ரசிகர்களுக்கு பெரும் கவலையே.
[youtube url=”https://www.youtube.com/watch?v=DDsgSdgy4aY” width=”560″ height=”315″]
(riz)