சஜித்தை வெற்றி பெற செய்வதன் மூலம் இழந்து போயுள்ள நாட்டின் நிம்மதியினை மீள கட்டியெழுப்ப முடியும்

சஜித்தை வெற்றி பெற செய்வதன் மூலம் இழந்து போயுள்ள நாட்டின் நிம்மதியினை மீள கட்டியெழுப்ப முடியும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் எந்தவொரு காலத்திலும் பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது,கடந்த ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின் கடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள் இன்று இம்மக்களிடத்தில் வந்து வாக்கு கேட்பது வேடிக்கையானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சஜித் ஆதரவு கூட்டம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான முஹம்மத் பாயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை வெல்லம்பிட்டியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேலும் தமதுரையில் குறிப்பிட்டதாவது –

கடந்த ஏப்ரல் மாதத் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம் சமூகத்தினால் கடுமையான கண்டனத்துக்குரியதாகும். ஒரு போது இதனை ஆதரிக்க முடியாது. இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயல், இந்த சம்பவத்தினையடுத்து நாட்டில் அப்பாவி முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டன, உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தினால் எமது நாட்டு முஸ்லிம்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். எந்த அளவுக்கு என்றால் இந்த நாட்டில் இனி மேல் வாழ முடியாது என்கின்ற நிலை உருவானது. சில வர்த்தகர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைவோம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

எந்த வித தவறும செய்யாத துறை சார்ந்தவர்கள் மீது கடுமையான போலி பிரசாரங்களை மேற்கொண்டார்கள். வைத்தியர் ஷாபி மீது எவ்வித ஆதரமுமில்லாத குற்றச் சாட்டினை சுமத்தி அவரை கைது செய்தது மட்டுமல்லாமல், அதன் பிற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் சென்று கர்ப்பிணித்தாய்மார்களிடம் சொல்ல இவருக்கு எதிரான முறைப்பாடுகளை செய்யும் படி கூறியது மட்டுமல்லாமல் இந்த கர்ப்பிணிகளுக்கு நஷ்டயீடு வழங்குவதாக இன்றைய மொட்டுக் கட்சி காரர்கள் பிரசாரம் செய்தார்கள். ஒரு நபரை கைது செய்வதற்கு இது சார்ந்த முறைப்பாடு இருக்க வேண்டும், ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்து வேறு விடயங்களை கொண்டு இந்த சமூகத்தினை நோவினைப்படுத்தினர். இதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்தது,

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் வைத்தியர்களை இங்கிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காகவே. இதே போன்று தான் இந்த சஹ்ரானை என்னுடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். எனது வாழ்நாளில் இந்த சஹ்ரானை கண்டதுமில்லை, எந்த தொடர்புகளும் இருந்ததுமில்லை. அப்படிப்பட்ட என்னைக் கொண்டு வந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்வில, எஸ்.பீ.திசாநாயக்க, மற்றும் ரன்ம தேரர் ஆனந்ததேரர் என பலரும் எனக்கு எதிராக 300 முறைப்பாடுகளை செய்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்தது என்னை எப்படியாவது சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று இந்த சமூகத்துக்காக பேசிக் கொண்டிருக்கும் எமது குரலை எப்படியாவது நசுக்கிவிட வேண்டும் என்று,பேசாதவர்களாக ஆக்கி அரசியல் வாதிகளை அடக்கிவிட வேண்டும் என்று இதனை செய்தார்கள்.

இந்த பிரச்சினைக்கு முன்னரும், பின்னரும் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார்கள். பிரபல வர்த்தக நிலையங்களை சாம்பலாக்கினார்கள். பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டன. ஏன் இதனை செய்தார்கள் என்றால் இவ்வாறு அச்சுறுத்தி முஸ்லிம்களது பொருளாதார சக்தியினை அழித்து மக்களை அடிமைகளாக ஆக்கலாம் என்று சிந்தித்தார்கள். அமைச்சர் பதவியினை பதவியினை பறிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி என்கெதிரான அப்பட்டமான பொய்களை கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையினை கொண்டுவந்தார்கள். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் றிசாத் பதியுதீனுக்கு அதரவாக வாக்களித்துவிட்டு கிராமங்களுக்கு வரக் கூடாது என்ற வாசகங்கள் கொண்ட பேஸ்டர்களை ஒரே மாதிரி தயாரித்து 13000 கிராமங்களில் ஒட்டினார்கள்.

வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள், கத்தான்குடியில் தொழுகையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது போன்ற எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தவுமில்லை, இதே போன்று பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் துணை போகவுமில்லை, சமாதானத்தையும்,ஏனைய சமூகத்தின் உரிமைகளையும், கௌரவத்தினையும் மதித்து பொறுமையாக இந்த தாய் நாட்டின் மீது பற்றுள்ளவர்களாக நாங்கள் வாழ்ந்துவந்துள்ளோம். 2009 அம் ஆண்டு சமாதானம் ஏற்பட்டதன் பின்னர் பல்வேறுபட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவைகள் இந்த நாட்டு முஸ்லிமகள் மீது அபதத்தை சுமத்தும் அளவுக்கு வளர்ந்துவந்த போது கடந்த அரசாங்கத்தில் இருந்த நாங்கள் இதனை அடக்குங்கள்,கட்டுப்படுத்துங்கள் என்று அப்போதைய ஜனாதிபதியிடம் கேட்டோம்.பாதுகாப்பு செயலராக இருந்த இன்றை வேட்பாளர் காலிக்கு சென்று இனவாத அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து இவர்களது செயற்பாட்டினை வலுப்படுத்தினார். இநத அமைப்புக்களுக்கு ஒரு சில ஊடங்கங்கள் முக்கியத்துவமளித்து இனவாத மோதல்களை ஏற்படுத்த துாபமிட்டார்கள். சமூகத்தில் எவ்வித அந்தஸ்த்தும் இல்லாமதவர்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கின. நாங்கள் மக்களுக்காக பேசினால் இதனை மழுங்கடிப்பும், இருட்டடிப்பும் செய்யும் கலாசாரம் காணப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ஆசைப்பட்டார்கள். இலங்கையில் அமைதியாக வாழ்ந்த இஸ்லாமிய சமூகத்தினை நசுக்கி குரல் வலையினை மிதித்து விடலாம் என்று, இவர்கள் இப்போது வீரர்கள் போன்று மொட்டுக் கட்சியின் மேடையில் முழங்கி திரிகின்றார்கள்.

இந்த நாட்டில் 1100 வருட கால வரலாற்றினை கொண்டது எமது முஸ்லிம் சமூகம், அன்று முதல் இன்று வரை நாட்டில் எத்தனை குழுக்கள் ஆயுதம் ஏந்தி மக்களை கொண்டு குவித்தார்கள்.அரச சொத்துக்களை அழித்து நாசமாக்கினார்கள். இவர்கள் இன்று வந்து இனவாதத்தை கக்குகின்றார்கள்.இப்படிப்பட்டவர்கள் தான் இந்த நாட்டு மக்களுக்கு விமோசனத்தினையும், பாதுகாப்பினையும் வழங்கப்பஸ போவதாக கூவித்திரிகின்றனர். புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை தோற்கடிக்க பெரும் பிரயத்தனம் செய்கின்றனர். இதற்கு என்னென் சதிகளை செய்கின்றனர்.

எனவே இந்த நாட்டில் மீண்டும் ஒரு போதும் இனக்கலவரத்தினை துாண்டும் சக்திகளுக்கு மக்கள் அஙகீகாரத்தை வழங்க மாட்டார்கள். புதிய சிந்தணையுடன் எதிர்கால சமூகத்தினை பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாடுகளுக்கான நல்ல கொள்கைகளை சஜித் பிரேமதாச கொண்டுள்ளார். அவரை வெற்றி பெற செய்வதன் மூலம் தான் இழந்து போயுள்ள நாட்டின் நிம்மதியினை மீள கட்டியெழுப்ப முடியும் என்று தாங்கள் நம்ர்வதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,மேல் மாகாண சபை சபையின் முன்னாள் உறுப்பினர்களான முஹம்மத் அக்ரம்,முஹம்மத் பைரூஸ்,அர்சத் நிசாம்தீன்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா உட்பட பலரும் இதன் போது உரையாற்றினர்.

-ஊடகப்பிரிவு-