
Laugfs எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்குச்சந்தைப் பட்டியலிலுள்ள லாப் (Laugfs) எரிவாயு நிறுவனத்தின் பங்கு விலைகளை செயற்கையான முறையில் மாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபில்யு.கே.எச் வேகபிட்டிய, யு.கே திலக் என் டி சில்வா, தக்ஷில ஐ ஹுலங்கமுவ ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
செயற்கையான முறையில் பங்குச்சந்தை செயற்பாடுகளை வழிநடத்துவதற்குத் திட்டம் தீட்டியமை மற்றும் லாப் (Laugfs) எரிவாயு பங்கு விலைகள் தொடர்பில் குறித்த குற்றத்தை புரிவதற்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.