எச்சந்தர்ப்பத்திலும் முகங்கொடுக்கத் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவம் மற்றும் யுத்த இடர்பாடுகள் தொடர்பான இந்திய பாதுகாப்பு ஆய்வாளராக கருதப்படும் கோகலே இலங்கை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் நேர்காணல் ஒன்றை கடந்த சனிக்கிழமை (23) நடத்தியிருந்தார்.

இதன் போது புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் எதிர்கால இலக்கு தொடர்பில் அவர் இராணுவ தளபதியிடம் அவர் வினவியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய இராணுவத் தளபதி, 2009 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இராணுவம் சேவையாற்றிய விதம் மற்றும் போருக்கு பின்னர் தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்களின் வளர்ச்சியில் இராணுவத்தின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விளக்கியுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் நோக்கத்தை நிறைவேற்ற இராணுவம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும், எதிர்பாராத அச்சுறுத்தல்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்கும் வகையில் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.