(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்ய ரஞ்சனின் குரல் மாதிரியினை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த இருந்த நிலையில், அவரை குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் உறுதி செய்துள்ள நிலையில், மீள் அறிவிக்கும் வரையில் குரல் பரிசோதனைக்காக சந்தேக நபரை முன்வைக்காது இருக்குமாறு நீதிமன்றினால் அறியப்படுத்தியுள்ளதாகவும் இதனால் அவரை குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தாது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்ற நீதிபதி யு.கே.பெல்பொலவினால் மெகசின் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்றைய தினம் அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைக்கு ரஞ்சன் உட்படுத்தப்படவிருந்தார். எனினும் கடந்த 17ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றுக்கு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை பேரூந்தில் நேற்று(22), நேற்று முன்தினம்(21) ஆகிய பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அவர் பாராளுமன்றில் விசேட உரை ஆற்றுவதற்கு முயன்ற போதிலும் அதற்கான சந்தர்ப்பம் இரு நாட்களும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில், அவர் கருத்துரைக்கையில், ஒரு இலட்சத்து இருபதாயிரம் குரல் பதிவுகள் என்னிடம் இருந்து பொலிசார் பறிமுதல் செய்தனர். அதனை அவர்கள் ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் (22) தெரிவித்திருந்தார்.
“.. என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் என்னுடைய கைப்பேசிகள் 4, வன் வட்டுக்கள் (Hard Disk) 8, மடிக்கணணி ஆகியவற்றை கைப்பற்றினார்.
எனினும், நான் எனது குரல்பதிவுகள் மற்றும் பெறுமதிமிக்க சான்றுகளை ஒரு வங்கியின் லொக்கரில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். நான் சிறையில் உள்ளதால் எனக்கு வெளியே செல்ல முடியாது. என்னுடைய செயலாளருக்கு சொல்லி உள்ளேன். ராஜபக்ஷ ரெஜிமென்டுகள் உலா வருகின்றனர். அதனால் அவற்றை உரிய நேரத்தில் பிரதியெடுக்க முடியவில்லை.
என்றாலும் நான் இன்றைய தினத்தினுள் அரசுக்கு எதிரான குரல் பதிவுகள் சிலவற்றினை மாலை 06 மணிக்கு முன்னர் ஒப்படைக்கிறேன்…” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எந்தவொரு குரல் பதிவுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றில் முன்வைக்கவில்லை என, இன்று(23) பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.