(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த மத ரீதியான வன்முறைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்கள்.
மத மோதல்களில் கொல்லப்பட்ட சுமார் 10 முதல் 15 பேரின் உடல்கள் அங்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையில் தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், முஸ்லிம் தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்.
“நாங்கள் அவனை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தோம். அவர்கள் என் மகனை கொன்று விட்டார்கள்,” என்று மருத்துவமனையின் வெளியே இருந்தவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
24 வயதாகும் அஷ்ஃபக் ஹுசைனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் திகதி தான் திருமணம் நடந்தது.
“ஐந்து துப்பாக்கி குண்டுகள் அஷ்ஃபக்கின் உடலில் பாய்ந்தன. அவற்றில் மூன்று குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்தன,” என்று கூறியுள்ளார்.
எஅஷ்ஃபக் ஹுசைன் பிப்ரவரி 25ஆம் திகதி மாலை முஸ்தஃபாபாத் பகுதியில் நடந்த வன்முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அவரது தாய் தெரிவிக்கிறார்.
என் மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்வது, அவளின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார் அவரது தாய்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்து வரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.