கொச்சிக்கடை குண்டுத் தாக்குதலும் அமெரிக்கா FBI சோதனைகளும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர் மற்றும் அவரின் மனைவியின் தொலைபேசிகள் நீதிமன்ற உத்தரவின்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவால் அமெரிக்காவின் எப்.பி.ஐ நிறுவனத்திற்கும், அவுஸ்திரேலியாவின் பெடரல் காவல்துறைக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் திசாநாயக்க, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று(06) சாட்சியம் வழங்கிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரியினதும், அவரின் மனைவியினதும் கையடக்க தொலைபேசிகள் விசாரணைகளுக்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டது.

பின்னர், குறித்த கையடக்க தொலைபேசிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி, அமெரிக்காவின் எப்.பி.ஐ நிறுவனத்திற்கும், அவுஸ்திரேலியாவின் பெடரல் காவல்துறைக்கும் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உத்தரவிட்டதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் திஸாநாயக்க சாட்சியம் வழங்கியுள்ளார்.

இது நீதிமன்ற உத்தரவின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏப்பரல் 21 தாக்கதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் தெரிவித்துள்ளார்.