(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒவ்வொரு நாடும் மும்முரமாக ஈடுபட்டு வருகையில், இலங்கையிலும் கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் பீதியினைக் கிளப்பியுள்ளது எனலாம்.
குறித்த வைரஸ் இனைத் தடுக்க சுகாதார அமைச்சினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றிற்குள்ளான நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் பயணிகளில் பலர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்து சுயநலமாக இருக்கிறார்கள்.
இதனால், விமான நிலையத்தில் அடிக்கடி அமைதியற்ற சூழல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(11) காலையும் சுமார் 300 பேர் தென்கொரியா, ஈரான், இத்தாலியிலிருந்து இலங்கை வந்திருந்தனர். அவர்களில் சிலர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு செல்ல இணங்கவில்லை.
தமது வீடுகளில் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக பிடிவாதம் பிடிப்பதால் அடிக்கடி குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா இலங்கையிலும் வியாபிக்கத் தொடங்கினால் இலங்கையின் முக்கிய நகரங்களை மூட வேண்டிய நிலை தோன்றவும் கூடும் என சுகாதார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை பாவிப்பது தொடர்பில் அதன் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.