பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்திய பயங்கர விளைவினை எதிர்நோக்கும்

பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்தியா பெரிய விலையை தரவேண்டியதாகிவிடும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹில் ஷெரிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியின் போது ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ரஹில் ஷெரிப், “நமது படைகள் அனைத்து வகையிலும் வெளிநபர்களின் அத்துமீறலை முறியடிக்க தேவையான வல்லமையுடன் உள்ளன.

குறுகியகால போரானாலும், நீண்டகால போரானாலும் எதிரிகள் நம்மிடம் வாலாட்ட நினைத்தால், எவ்வளவு பெரிய படையை கொண்டிருந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாத இழப்பை அவர்கள் விலையாக தர நேரிடும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை சந்திக்க தேவையான பலத்துடன் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது. பனிப்போர் ஆனாலும், நேரடிப்போர் ஆனாலும் எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ என்று கூறினார்.

முன்னதாக, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய குறுகியகால போர்முறைகளுக்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ தளபதி தல்பிர் சிங் சுஹாக் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி தற்போது இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)